2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் இதுவாகும். மேலும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டும் இதுவே. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட்டும் இதுவே.
அறிக்கை தாக்கலில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த வளர்ச்சி, கடைக்கோடி மனிதருக்கும் சேவை, உள்கட்டமைப்பு, திறன் பயன்பாடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்நலன் உள்ளிட்ட 7 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் ஆகியவற்றுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்க மாநிலங்கள் மற்றும் தனியார் பங்களிப்புடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
சிறு குறு விவசாயிகளுக்கான வேளாண்மை கடன் சங்கஞ்கள் மூலம் ரூ. 63 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு ரூ. 20 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ. 2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு, விவசாயிகளின் பாதுகாப்பு குறித்து இந்தியா அதிகளவு கவனம் செலுத்தி வருகிறது. தினை உற்பத்தியில் மிகப்பெரிய மற்றும் 2வது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. உடல்நலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சிறுதானியங்களின் தேவை, உற்பத்தி, பயன்பாட்டை அரசு அதிகரிக்கிறது.
ரசாயன உர பயன்பாட்டை குறைக்க கோவர்த்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
பசுமை வேளாண் திட்டத்திற்காக பி.எம் பிரணாம் எனப்படும் புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்ட ஊழியர் கல் பிரணாம் திட்டத்திற்காக பயன்படுத்தப்படுவர்.
மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி காடுகளை பாதுகாக்கவும், அதன் அளவை அதிகரிக்கவும் புதிய திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அலையாத்தி காடுகள் பாதுகாப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுவர்.
இந்த நிதியாண்டில் தோட்டக்கலைத்துறை வளர்ச்சிக்கு ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு சங்கங்கள் குறித்த தரவு தளம் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கூட்டுறவு சங்கம் உள்ள நிலை ஏற்படுத்தப்படும்.
நாடு முழுவதும் தற்போதுள்ள மருத்துவ கல்லூரிகளுடன் சேர்த்து 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் வகுக்கப்படும்.
சிறுவர், பெரியோருக்காக தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். இளைஞர்களுக்காக தேசிய மின்னணு நூலகம் உருவாக்கப்படும். என்ஜிஓவுடன் இணைது தேசிய டிஜிட்டல் நூலகத்தை வலுவுடன் கட்டமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீனவர் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் ஆய்வு நிறுவனங்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
பழங்குடியினர் மேம்பாட்டுக்காக 3 ஆண்டுகளில் ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அதன்படி, இலக்கு நிர்ணயித்த 3 ஆண்டுகளில் பழங்குடியினருக்கு திறன் வழங்கும் பயிற்சி அளிக்கப்படும். பழங்குடியின குழந்தைகளுக்கான ஏகலைவா பள்ளித் திட்டம் மேம்படுத்தப்படும். ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். வீடு, சுகாதார குடிநீர் வசதியை அனைத்து பழங்குடியினருக்கும் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான நிதி 66% அதிகரித்து ரூ. 79 ஆயிரம் கோடியாக்கப்படும்.
பல்வேறு துறைகளுக்கான மூலதன முதலீட்டு தொகை 33% அதிகரித்து ரூ. 10 லட்சம் கோடியாக்கப்படும்.
நொடிந்துபோகும் சிறுதொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க தனி நிதி உருவாக்கப்படும்.
கர்நாடக மாநிலத்தில் வறட்சி சமாளிப்பு, விவசாயிகள், பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும்.
கர்நாடகாவுக்கான அறிவிப்புகளை வெளியிட்டபோது தேர்தலுக்கான அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரூ. 2.4 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2013-14ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 9 மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும்.
கழிவுநீர் அகற்றும் பணியில் மனிதர்களுக்கு பதில் 100% இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்படுள்ளது. அதன்படி, நாட்டின் அனைத்து நகரங்களிலும் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றும் முறை செயல்படுத்தப்படும்.
அரசு ஊழியர்கள் தங்களது திறனை ஆன்லைன் மூலம் வளர்த்துக்கொள்ள கர்மயோகி திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
அனைத்து அரசு சேவைகளிலும் அடையாள ஆவணமாக பான் எண் பயன்படுத்தப்படும். நிதி சார்ந்த சேவைகளுக்கான கே.ஒய்.சி என்ற தனிநபர் விவரமுறை எளிதாக்கப்படும். ஆதார், பான், டிஜிலாக்கர் முறை ஆகியவை தனிநபர் அடையாளத்திற்காக பிரபலப்படுத்தப்படும்.
நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இலவச உணவு தானியங்கள் அளிக்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் இ-கோர்ட் எனப்படும் இணையதள நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்ற ரூ. 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 3 செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை எரிசக்தி நடைமுறைக்கு மாற ரூ. 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் திட்டத்திற்காக ரூ. 19,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் 5ஜி சேவை மேம்பாட்டிற்காக 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை அகற்றும் திட்டத்திற்கு மத்திய மாநில பங்களிப்போடு கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது. 2070 ஆம் ஆண்டுக்குள் வாகன புகை ஜீரோ எமிஷன் எனப்படும் பூஜ்ஜிய வெளியேற்ற நிலை எட்டப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும். இளைஞர்கள் உலகளாவிய வேலை பெற உதவும் வகையில் 30 மையங்கள் அமைக்கப்படும்.
சுற்றுலாத்துறை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும். அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும். சுற்றுலாத்துறை மேம்படுத்த தேக்னா அப்னா தேஷ் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படுகிறது. 50 சுற்றுலாத்தலங்கள் தேர்வு செய்யப்பட்டு முழு சுற்றுலா பேக்கேஜாக உருவாக்கப்படும்.
அனைத்து மாநில பொருட்காளும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.
ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற புதிய முறைக்காக யூனிட்டி மால்கள் அமைக்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ரூ. 9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கடன் வட்டியை 1% குறைக்க புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் சட்டம் மற்றும் ரிசர்வ் வங்கி சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
7.5% வட்டியில் பெண்களுக்கு புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் 2 ஆண்டுகளில் அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை சேமிக்கலாம். முதியோருக்கான சிறப்பு வாய்ந்த நிதி திட்டத்தில் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். அஞ்சல் அலுவலங்கள் மூலம் மாத வருமானம் பெறும் வகையில் முதியோர் வைப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை அளவு ரூ. 4.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஜாயிண்ட் கணக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 15 லட்சம் வரை பரிவர்த்தனை செய்துகொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
தற்போது நிதி பற்றாக்குறை 6.4 % ஆக திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. வரும் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 5.9% ஆக குறையும்.