மத்திய பட்ஜெட்டை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்.01) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த பட்ஜெடை கோவையில் உள்ள தொழில்துறையினர் வரவேற்றுள்ளதோடு அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) தலைவர் டி.ராஜ்குமார், 2023-24 மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறை மற்றும் திறன் மேம்பாட்டிற்கான முன்மொழிவுகளை அகில இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு(CITI) வரவேற்கிறது. இன்று உலக அரங்கில் இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான நட்சத்திரமாக அனைவரும் அங்கீகரித்து வருகிறது. உலகின் அனைத்து முக்கியப் பொருளாதாரங்களில் நமது பொருளாதார வளர்ச்சி மிக உயர்ந்ததாக (7%) கருதப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரம் மற்றும் குறிப்பாக ஜவுளித் துறையின் சீரான வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட பரந்த அளவிலான சீர்திருத்தங்கள் மற்றும் நல்ல கொள்கைகளை மேற்கொண்டதற்காக அரசாங்கத்திற்கு நன்றி. கிளஸ்ட்டர்-அடிப்படை மற்றும் வால்யு செயின் அடிப்படையில் பொது தனியார் கூட்டாண்மை மூலம் கூடுதல் நீளமான பருத்தியின் (ELS) உற்பத்தித்திறனை மேம்படுத்த அரசு எடுத்திருக்கும் முயற்சி வரவேற்புக்குரியது. இந்த திட்ட அறிவிப்பின் முழு விவரங்களை ஜவுளி துறை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் விவசாயப் பொருட்களின் தரவு சேகரிப்பு சிறந்த பயிர் மதிப்பீட்டிற்கும் பருத்தி விலையை கணிக்கவும் உதவும் என்றார்.
இதுக்குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் ஶ்ரீ ராமூலு கூறுகையில், சிறந்த தொழில் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக பார்கிறேன். கொரானா காலத்திற்கு பிறகு மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது நம் நாடு வளர்சியை எட்டியுள்ளது. மேலும் கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்விக்காக, டிஜிட்டல் நூலகம் போன்றவை போன்றவை வரவேற்கதக்கது. நாட்டின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியாக இருக்க வேண்டும். அதற்காக இயற்கை விவசாயம் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதை வரவேற்கிறோம். விவசாயத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கியுள்ளது. நிலத்தித்கு தகுந்த விவசாயத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை டிஜிட்டல் சேவை மூலம் தெரிந்துகொள்ளும் வசதி கொண்டுவந்துள்ளது விவசாயம் வளருவதற்கான வாய்ப்புள்ளது.
உள்கட்டமைப்பு வசதியை பொருத்தவரை 1880 வருடத்தில் அமெரிக்க பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ந்தது. மொத்தத்தில் இந்த பட்ஜட் வரவேற்கத்தக்க பட்ஜெட். ஏமாற்றம் அளிக்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. தொழில்துறையினருக்கான பட்ஜெட்டாக இல்லாமல் இந்தியாவின் அனைத்து துறைக்களுக்குமான பட்ஜெடாக உள்ளது. மூல பொருட்களின் உயர்வு முன்பு இருந்ததைவிட தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது. நவம்பர்,டிசம்பருக்கு பிறகு வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய மூலபொருட்களின் விலை குறைந்துள்ளது என்றார்.
இதேபோல் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ரவிசாம் மத்திய பட்ஜெட் குறித்து கூறுகையில், இறக்குமதி வரி அதிகரித்துள்ளது. குறையும் என எதிர்பார்த்திருந்தோம். அதுகுறித்தான எந்த அறிக்கையும் இல்லை. இந்த பட்ஜட் ஜவுளித்துறைக்கு மகிழ்ச்சியும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. இந்த பட்ஜெட் ஓரளவிற்கு சந்தோசம் அளித்துள்ளது. விவசாயத்திற்கு அதிகமான முக்கியதுவம் அளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர்களுக்கு முக்கியதுவம் கொடுத்துள்ளதும் மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரி அதிகரித்துள்ளது. குறையும் என எதிர்பார்த்திருந்தோம். ஜவுளித்துறையை பொருத்தவரை பயனில்லாத பட்ஜட்டாக உள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக உள்ளது என்று தெரிவித்தார்.