திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் தாலிப்ராஜா. இவர் மீது திருப்பூர் வடக்கு நல்லூர் காவல் நிலையங்களில் நகை பறிப்பு குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக தாலிப்ராஜா கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிறையில் இருந்து தாலிப்ராஜா உள்ளிட்ட மூன்று கைதிகளை ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேருந்தில் அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக கைதிகளை திருப்பூர் ஆயுதப்படை போலீசார் பேருந்தில் கோவைக்கு அழைத்து வந்தனர். ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து நின்றது. அப்பொழுது காவலர் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு திடீரென பேருந்து படிக்கட்டில் இருந்து குதித்து தாலிப்ராஜா தப்பி ஓடிவிட்டார். பாதுகாப்புக்காக வந்த போலீசார் கூச்சலிட்டு பொதுமக்கள் உதவியுடன் பிடிக்க முயன்றனர். ஆனால் பிடிக்க முடியவில்லை. இது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில் தாலிப்ராஜாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கைது தப்பி ஓடியதை தொடர்ந்து பாதுகாப்புக்கு வந்த திருப்பூர் ஆயுதப்படை காவலர்கள் ஐந்து பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நகை பறிப்பு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில் தாலிப்ராஜா தப்பி ஓடிய சம்பவம் கோவையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.