கோவை: நெல்லையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 50). இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் நெல்லை செல்வதற்காக தனது நண்பர் கோவை சேர்ந்த விஜய் (45) என்பவருடன் ரெயில் நிலையம் வந்தார். நெல்லை செல்வதற்காக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறினார். அப்போது தான் கொண்டு வந்த லேப் -டாப் பேக்கை ரெயில் இருக்கையில் வைத்தார். பின்னர் கீழே இறங்கி வழி அனுப்ப வந்த நண்பர் விஜயையுடன் பேசி கொண்டு இருந்தார். ரெயில் புறப்படும் நேரமானதும் இருக்கைக்கு சென்றார். அப்போது தான் வைத்த லேப்-டாப் பேக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து கிடைக்காததால் அவர் விஜயிடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க கூறி புறப்பட்டு சென்றார். பின்னர் இதுகுறித்து விஜய் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரமேஷ், மகாராஜன், மாரிமுத்து ஆகியோர் உடனே ரெயில் நிலையம் பிளாட்பாரம் முழுவதும் சோதனை செய்து திருடனை தேடினர்.
அப்போது 5-வது பிளாட்பாரத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். போலீசார் அவரை படித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார். இதனால் போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பாலக்காட்டை சேர்ந்த சியாஸ் (வயது 20) என்பதும் அவர் ரெயிலில் பாலசுப்பிரமணியின் லேப்-டாப் மற்றும் ரூ.4000 திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லேப்-டாப் மற்றும் ரூ.4000 பறிமுதல் செய்து சியாசை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் வந்த சில மணி நேரங்களில் திருடனை கையும் கலவுமாக பிடித்த போலீசாரை பொதுமக்கள், உயர் அதிகாரிகள் பாராட்டினர்.