இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதனால் நேர்முக மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் தமிழகத்தில் பெருகி வருகின்றன.
தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருவதால் சர்வதேச நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன. ஏற்கனவே இங்கு இயங்கி வரும் தொழிற்சாலைகளும் தங்கள் மேலும் முதலீடுகளை அதிகரித்து தங்கள் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்து வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸ்-ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களான ரெனால்ட்-நிசான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மேலும் 5,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனமும், ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. சென்னைக்கு அருகே உள்ள ஒரகடம் பகுதியில் ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சூழலில் தமிழ் நாட்டில் மேலும் பல்லாயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து, தொழிலை விரிவுபடுத்துவதற்கு ரெனால்ட்-நிஸான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் சென்னை தொழிற்சாலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளன. இதன் மூலம் சென்னையில் உள்ள அந்நிறுவனங்களின் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 3,300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. தொழிற்சாலையை நவீனப்படுத்தி, அதன் உற்பத்தி திறனை மேம்படுத்த இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.
மேலும் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு ஏற்ற புதிய மாடல்களையும் ஒரகடம் தொழிற்சாலையில் தயாரிக்க ரெனால்ட்-நிசான் கூட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய முதலீட்டால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த புதிய முதலீட்டின் மூலம் சென்னை தொழிற்சாலையில் ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் 2 எலக்ட்ரிக் கார்கள் உள்ளிட்ட 6 புதிய கார்களை உற்பத்தி செய்யவுள்ளன.
ரெனால்ட்-நிஸான் நிறுவனங்களின் புதிய முதலீடானது, உற்பத்தியை அதிகரிக்க உதவுவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியாவில் தங்களது கார் விற்பனையை அதிகரிப்பதற்கு ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த புதிய முதலீடு மூலம் தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரெனால்ட்-நிஸான் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ள 2 புதிய எலெக்ட்ரிக் கார்களும் பெருவாரியான மக்கள் வாங்கும் வகையில் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வரவுள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் புரட்சி உருவாகியுள்ள நிலையில், புதிய மாடல்களுக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது நிச்சயம் மகிழ்ச்சியான செய்திதான். அதுவும் அந்தக் கார்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி.