கொழும்பு: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா செல்ல இருப்பதாகவும் அப்பயணத்தின் போது இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதர நெருக்கடிகளால் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினர். இருவரும் உயிருக்கு அஞ்சி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று பின்னர் இலங்கை திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜபக்சே சகோதரர்களின் ஆதரவு எம்பிக்களின் தயவால் நாடாளுமன்றம் மூலம் ஜனாதிபதியாக ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் யார் பதவி ஏற்றாலும் அண்டை நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு உடனடியாக செல்வது வழக்கம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கே இந்திய பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வருகிறது.
இதனிடையே இலங்கையில் உள்ளூராட்சி தேர்தல்கள், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 1987-ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13-வது அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இன்றும் இந்தியாவின் நிலைப்பாடு. இந்த 13-வது திருத்தம் பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பது சிங்களவர் நிலைப்பாடு. இந்த 13-வது திருத்தத்தால் அரசியல் அதிகாரம் கிடைக்காது என்பது தமிழர் நிலைப்பாடு. ஆனாலும் இந்திய அரசு இந்த 13-வது திருத்தத்தையே வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இலங்கைக்கு அடுத்தடுத்து இந்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன், எல்.முருகன் தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டனர். இந்த பயணங்களின் போதும் 13-வது திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இலங்கை பயணம் மேற்கொன்டனர்.
இப்பயணம் தொடர்பாக இலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேட்டியளித்துள்ளார். அதில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது. இதனால் இருநாட்டு கடல்வளம் மிக மோசமாக அழிந்து போய்விட்டது. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் (தமிழ்நாடு) மீன்பிடிப்பதற்கான லைசென்ஸ் வழங்குவது தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் டெல்லி செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது, கச்சத்தீவை மீட்பது ஆகியவையே கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வாக பேசப்பட்டு வருகிறது. இதனை இலங்கை கடந்த காலங்களில் நிராகரித்தும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது