கோவை மதுக்கரை அருகே உள்ள கே.ஜி. சாவடியில் அருள்மிகு, மாகாளியம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜையை முடித்துவிட்டு பூசாரி கோவில் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலை வழக்கம் போல பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது .இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். கோவில் நிர்வாக சார்பில் கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி. டி.வி .கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் .இதில் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் 3 பேர் கோவிலில் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதும், அந்த காசுகளை கோவிலில் இருந்த துணியை எடுத்து மூட்டையாக கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது ,கண்காணிப்பு காமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவில் உண்டியல் பணத்தை திருடிய 3 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள். கோவிலில் மர்ம ஆசாமிகள் திருடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.