கோவை: நெல்லை கரையிருப்பை சேர்ந்தவர் தாடி வீரன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 28).
ஆட்டோ டிரைவர். இவர் கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி இருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரை அவரது நண்பரான லோடு வேன் டிரைவர் சாரங்க பாணி (31) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். பின்னர் அவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து காட்டூர் போலீசார் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நண்பரை கொலை செய்து விட்டு சரண் அடைந்த சாரங்கபாணியை காட்டூர் போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நண்பரை கொலை செய்ததற்கான காரணம் குறித்து சாரங்கபாணியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் 2 பேரும் கணபதி எப்.சி.ஐ. ரோட்டில் உள்ள ஒரு பேக்கரி முன்பு ஸ்டாண்டில் எங்களது வாகனத்தை நிறுத்தி வாடகைக்கு ஓட்டி வந்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுப்பிரமணி ஆட்டோ வாங்குவதற்காக என்னிடம் ரூ.20 ஆயிரம் கடன் கேட்டார். மேலும் சில வாரங்களில் பணத்தை திருப்பி தருவதாக என்னிடம் கூறினார். இதனையடுத்து நான் ரூ.20 ஆயிரம் பணத்தை தயார் செய்து அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் சுப்பிரமணி பணத்தை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இது குறித்து நான் பலமுறை அவரிடம் கேட்டும் அவர் பணத்தை திருப்பி தரவில்லை. இதனால் சுப்பிரமணி மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று மாலை 5 மணியளவில் அவர் மது குடித்து விட்டு வாகனம் நிறுத்தும் ஸ்டாண்டில் அமர்ந்து இருந்தார். அப்போது நான் அங்கு சென்றேன். பின்னர் அவரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை திருப்பி கொடுக்கும்படி கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நான் எனது வாகனத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சுப்பிரமணியில் தலையில் தாக்கினேன். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் காட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறினார். போலீசார் நண்பரை கொலை செய்த வழக்கில் சரண் அடைந்த சாரங்கபாணியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.