ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தலுக்கு இடையில் மக்களுக்கு க்யூ ஆர் கோடு மூலம் பணம் கொடுக்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் என்று வந்துவிட்டாலே காசு கொடுப்பது தொடர்பான புகார்களும் வழக்கமாகிவிடும். நேரடியாக கையில் காசு கொடுக்கும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் காசுக்கு பதில் மூக்குத்தி கொடுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அதன்பின் கொலுசு வழங்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன.
பின்னர் வீட்டிற்கு தேவையான குக்கர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இதெல்லாம் ஒரு படி மேலே போய் அருகில் இருக்கும் கடைகளில் டோக்கன் கொடுக்கப்பட்டு அங்கே சென்றால் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டது. தேர்தலுக்கு தேர்தல் மக்களுக்கு பட்டுவாடா செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. அதன்பின் ரூபாய் நோட்டு சீரியல் எண்ணை வைத்து பணப்பட்டுவாடா செய்வதும் நடைபெற்றது. இப்படி தேர்தல் தேர்தல் பணம் கொடுப்பதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் க்யூ ஆர் கோடு மூலம் பணம் கொடுக்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதில் ஒரு பக்கம் திறக்கும், அந்த பக்கத்தில் போன் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்தால், சில நேரங்களில் யுபிஐ மூலம் பணம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, அதில் வார்டு உள்ளிட்ட விவரங்களை, யுபிஐ எண்ணுடன் கொடுத்தால் தானாக பணம் வந்துவிடும். பிரபல கட்சி ஒன்றின் மூலம் தேர்தலுக்கு இப்படி பணம் விநியோகிக்கப்படுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களுக்கு கொலுசு , குக்கர் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்களுக்கு வீடு வீடாக குக்கர் வழங்கப்படுவதாகவும், பெண்களுக்கு பாக்கெட்டுகளில் கொலுசு வழங்கப்படுவதாகவும் புகார் வைக்கப்பட்டது. மக்களுக்கு கொலுசு, குக்கர் விநியோகம் செய்யப்பட்டதாக பறக்கும் படையினருக்கும் புகார் சென்றுள்ளது. இதையடுத்து ஈரோடு கிழக்கில் சிந்தா நகர், மாதவ காடு பகுதிகளில் பறக்கும் படையினர் களமிறங்கி சோதனை செய்தனர். ஆனால் குக்கர், கொலுசு எதுவும் அங்கே பறிமுதல் செய்யப்படவில்லை.
மற்ற பகுதிகளில் தற்போது பறக்கும்படையினர் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். இந்த புகார்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படையினர் தற்போது இங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பறக்கும்படையினர் தற்போது இங்கே வார்டு வாரியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கே இருக்கும் குடோன்களிலும் தற்போது பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். பெரிய கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறதா என்றும் பறக்கும் படையினர் விசாரணை செய்து வருகின்றனர். வார்டு வாரியாக சாலைகள் அடைக்கப்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த நிலையில்தான் தற்போது க்யூ ஆர் கோட் விவகாரம் வெடித்து உள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியே பதற்றத்துடன் காணப்படுகிறது,