சிறு, குறு தொழில் நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் சார்பாக அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் சென்னையில் உள்ள மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் மேம்பாட்டு அலுவலகமும் இணைந்து மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இந்த கருத்தரங்கை நடத்தப்பட உள்ளது. இந்த கருத்தரங்கானது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தங்களது தொழில்களை மேம்படுத்தும் விதமாக நடக்க உள்ளது. மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மத்திய அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை கொள்முதல் செய்யும் மொத்த சரக்கு மற்றும் சேவைகளை 25 சதவீத பங்கை சிறு மற்றும் குறுந்தொழில்கள் பூர்த்தி செய்கிறது. மேலும் 25 சதவீதத்தில் நான்கு சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதேப்போல் மூன்று சதவீதம் பெண் தொழில் முனைவோர்களிடமிருந்து உற்பத்தி பொருட்கள் பெறப்படுகிறது. இது போன்ற திட்டத்தை தமிழ்நாடு அரசும் செயல்படுத்துகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த தொழில் முனைபவர்களின் உற்பத்தியில் 5 சதவீதத்தை தமிழ்நாடு அரசு கட்டாயம் கொள்முதல் செய்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த சிறு மற்றும் குறுந்தொழில்கள் முனைபவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக மார்ச் 3 மற்றும் நான்காம் தேதிகளை இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.