அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என பிளவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இரு தரப்பும் சட்ட போராட்டம் மேற்கொண்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கனவே சட்டமன்ற எதிர்கட்சி துணைதலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கிவிட்டு ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணை தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஆனால் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சட்டப்பேரவை துணைத்தலைவர் இருக்கையை சபாநாயகர் வழங்கி இருந்தார். தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக ஓபிஎஸ்க்கு மாற்று இருக்கை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த இடத்தில் இருக்கை ஒதுக்கப்படும் என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு இருக்கை வழங்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அப்பாவு, சட்டப்பேரவையில் சட்ட விதிமுறைப்படி யாருக்கு எங்கு இருக்கை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். உறுப்பினர்களுக்கு ஏற்றார் போல் இருக்கைகள் வழங்கும் முழு உரிமை என்னிடம் உள்ளது. அனைவருக்கும் சமமான உரிமையை கொடுப்பது எங்கள் நோக்கம் என அவர் அப்பாவு பதிலளித்தார்.