இனி வீட்டிலேயே வாகனங்களுக்கு எரிபொருளைத் தயாரிக்கலாம் – மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சொன்ன சூப்பர் தகவல்..!

த்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, இவர் அவ்வப்போது தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இந்தியாவின் எதிர்கால திட்டங்கள் குறித்துப் பேசுவார்.

இப்படியாகச் சமீபத்தில் இவர் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவில் இனி விவசாயிகளே வாகனங்களுக்கான எரிபொருளைத் தயாரிக்க முடியும் எனப் பேசியுள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இந்த கூட்டத்தில் நிதின்கட்கரி பேசுகையில் : ” இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் வாகனங்களே அதிகம் விற்பனையாகி வருகிறது. ஆனால் தற்போது மாற்ற எரிசக்தி கொண்ட வாகனங்களின் வருகை மார்கெட்டையே புரட்டிப் போடப்போகிறது. எதிர்காலத்தில் இந்த ரக வாகனங்கள் தான் அதிகம் விற்பனையாகவுள்ளது. இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

தற்போது நாம் ஒவ்வொரு ஆண்டும் எரிபொருளுக்காக ரூ16 லட்சம் கோடி செலவு செய்கிறோம். ஆனால் மாற்ற எரிபொருளாக ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் கலந்த பெட்ரோல் அதிகமான பயன்பாட்டிற்கு வரப்போகிறது. அப்படி என்றால் இதை இந்தியாவில் உள்ள விவசாயிகளாலேயே உருவாக்க முடியும். அப்படி அவர்கள் தயாரிப்பது மூலம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.

ஆட்டோமொபைல் துறையில் நடக்கப்போகும் இந்த மாற்றத்தால் விவசாயிகளுக்குப் புதிதாகப் பணம் சம்பாதிக்க ஒரு வழி கிடைக்கப்போகிறது. எதிர்காலத்தில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக விவசாயிகள் தயாரிக்கும் எரிபொருளைக் கொண்டே இந்தியாவில் வாகனங்கள் இயங்கும். இது இயற்கையையும் பாழாக்காது, விவசாயிகள் மூலம் வாகனங்களுக்கு எரிபொருள் தயாரித்து சர்வதேச அளவில் ஏற்றுமதி கூடச் செய்ய முடியும்” எனக் கூறினார்.

இவர் பேசும் போது பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக மாற்று எரிசக்தி வாகனங்கள் வரும் எனத் தெரிவித்தார். ஆனால் இதற்கு எவ்வளவு காலங்கள் ஆகும் என்ற தகவல்கள் தெரியவில்லை. உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான தடை குறித்த தகவல்களை அறிவித்துள்ளனர். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளன. ஆனால் இந்தியா அதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்தியாவில் தற்போது மாற்று எரிசக்தி என்றால் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிகம் இருக்கிறது. இவை லித்தியம் அயான் பேட்டரியில் மின் சக்தியைச் சேமித்து அதன் மூலம் இயங்குகிறது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் மத்தியில் தயக்கம் இருக்கிறது. பெட்ரோல்/டீசல் இன்ஜின் கார் ரூ6 லட்சம் விலையில் விற்பனையாகிறது என்றால் அதே கார் எலெக்ட்ரிக் காராக வந்தால் ரூ10 லட்சம் வரை செலவாகும்.

அப்படியென்றால் எதிர்பார்த்தை விட அதிகமாகச் செலவாகும் என்பதால் மக்கள் பெட்ரோல், டீசல் கார்களே விரும்புகின்றனர். இது குறித்து மத்திய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அடுத்த ஆண்டே லித்தியம் அயான் பேட்டரிக்கான விலை வெகுவாக குறையும் எனவும், இதனால் அதன் பிறகு இவி கார்களுகுகான விலையும் குறையும் எனத் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் காஷ்மீர் பகுதியில் மிகப்பெரிய அளவில் லித்தியம் அயான் படிமங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த லித்தியம் அயான் வெட்டியெடுக்கப்படும் பட்சத்தில் அதன் விலை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோலை பொருத்தவரை அரசு ஏற்கனவே காலக்கெடுவை நிர்ணயம் செய்து எத்தனால் கலப்பை துவங்கிவிட்டது.

தற்போது பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனாலை கலக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை 80 சதவீதம் வரை எதிர்காலத்தில் உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. ஹைட்ரஜன் வாகனங்களைப் பொருத்தவரை அந்த தொழிற்நுட்பம் இன்னும் மேம்பட்டால் தான் குறைவான விலையில் இந்த தொழிற்நுட்பம் கொண்ட வாகனங்களைத் தயாரிக்க முடியும். ஹைட்ரஜன் வாகனங்கள் குறைவான வந்துவிட்டால் மற்ற எரிசக்தியை விட இதை மக்கள் அதிகம் விரும்புவார்கள்