கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் பெருமாள் பிரபு. இவரது மனைவி சந்திர பிரபா (வயது35). சம்பவத்தன்று இவர் தனது சகோதரியுடன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் நிறுத்ததில் இறங்க முயன்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளம் பெண் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த இளம் பெண்ணை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் செயின் பறித்த இளம் பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மனைவி சத்யா (32) என்பது தெரிய வந்தது.
காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்தது. அதில், சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களில் எந்த நாளில், எந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன் கூட்டியே அறிந்து வைத்து உள்ளனர். அதன்படி, எப்போது எங்கு சென்று கூட்டத்தை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முன் கூட்டியே திட்டம் வகுத்து வைத்து உள்ளனர். அதன்படி சத்யா திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த திருவிழாகக்களில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. திருவிழா நேரங்களில் அந்தந்த ஊருக்கு சென்று நோட்டமிட்டு பக்தரைப் போல் வேஷமிட்டு நகை பணத்தை பறித்து சென்றதும் தெரிய வந்தது. இதில் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்களது சொந்த ஊரில் ஆடம்பர பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இன்னும் சில நாளில் கோவை கோனியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதனை அறிந்து நகை மற்றும் பொருட்களை திருடி செல்ல சத்யா முன் கூட்டியே கோவை வந்து திருட்டில் ஈடுபட்ட போது காவல் துறையினரிடம் சிக்கியது தெரிய வந்தது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்ட சத்யாவுடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.