இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமம் ஒரு சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான கடனைப் பெற்றுள்ளதாக தனது கடனாளர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாவிட்டாலும், இந்த தகவல் நம்பதகுந்த வட்டாரத்தில் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு அதானி குழுமம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைந்திருந்தாலும், புதிய கடனை இதுவரையில் வாங்கவில்லை.
ரேட்டிங் அமைப்புகள் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பீட்டை குறைத்து வரும் காரணத்தால் புதிய கடனை வாங்கவும், நிதி திரட்டவும் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. இது மட்டும் அல்லாமல் பல மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழும நிறுவன பங்குகளை வாங்க விருப்பம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து சரிந்து வந்தது.
புதன்கிழமை உடன் முடிவடைந்த மூன்று நாள் முதலீட்டாளர் பார்வையில் 5 பில்லியன் டாலர் வரையில் நிதி திரட்டப்பட்டும் என தகவல் வெளியான நிவையில், கடந்த 2 நாட்களாக அதானி குழும பங்குகள் உயர்வுடன் காணப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது சவ்ரின் வெல்ட் பண்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான கடனைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதா ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தற்போது வெளியான தகவல்களில் எந்த சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனம் கடனை அளித்துள்ளது என்பது இல்லை, இதேபோல் அதானி குழுமத்தின் செய்தி தொடர்பாளரும் இதுக்குறித்து அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை.
ஆதானி குழுமம் ஏற்கனவே தனது பங்குகளை அடமானமாக வைத்து வாங்கப்பட்ட கடனில் சுமார் 690 முதல் 790 மில்லயன் டாலர் அளவிலான தொகை முன்கூட்டியே அல்லது சரியான காலத்தில் செலுத்துவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்த 3 பில்லியன் டாலர் அளவிலான தொகை திரட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & SEZ, அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட பங்குகள் கணிசமாக உயர்ந்த காரணத்தால் அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பு 39,000 கோடி ரூபாய் அதிகரித்து, 7.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்து வருகிறது. செவ்வாய்கிழமை வர்த்தகத்தில் 30,000 கோடி ரூபாய் வரையில் உயர்ந்தது.
அதானி குழுமம் ஜனவரி 24 ஆம் தேதி முதல் அதாவது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து இதுவரையில் 1.114 பில்லியன் டாலர் அதாவது 9200 கோடி ரூபாய் கடனை அடைந்துள்ளது.
அதானி குழுமம் தனது நிறுவன பங்குகளுக்கு எதிராகக் கடன் வாங்கியிருந்தது, தற்போது இந்நிறுவன பங்குகள் 80 சதவீதம் வரையில் சரிந்த நிலையில் முதல்கட்டமாக இந்தக் கடன்களை அதன் முதிர்வு காலத்திற்கு முன்பாகவே செலுத்தியுள்ளது.
அதானி குழுமத்தில் இருந்து பட்டியலிடப்பட்ட ஏழு அதானி குழும நிறுவனங்கள் ஜனவரி 24 அன்று வெளியிட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையின் 140 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சந்தை மதிப்பை இழந்துள்ளது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் நிராகரித்ததுடன், எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது.