கோவையில் ஒரு குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து போலியான லிங்க் அனுப்பி மோசடி நடப்பதாக புகார் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் 50க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கோவை நகர சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர். செல்போனிற்கு வங்கி கடன், வீட்டு கடன், நகை கடன் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் கேட்டு மெசேஜ் லிங்க் வந்து கொண்டிருக்கிறது. சுயவிவர தகவல்களை மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்களது கடன் விவரங்களை வங்கி கணக்குடன் சேர்க்க முடியாது. முறையான தவணை தொகையை கையாள முடியாது என கூறி அந்த மெேசஜ் வருகிறது.
கே.ஓய்.சி தகவல்தானே என சிலர் தைரியமாக வங்கி கணக்கு விவரங்களை ஆன்லைன் மூலமாக அப்டேட் செய்கிறார்கள். ஆனால் போலி லிங்க் மூலமாக இந்த தகவல் பெறப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் முறை கேடாக பெறப்படுவதாக தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட ஒரு வங்கியின் மூலமாக இந்த மோசடி மெசேஜ் அதிகமாகி வருவதை அறிந்த சைபர் கிரைம் போலீசார் அந்த வங்கிக்கு தகவல் அனுப்பி உஷார்படுத்தினர். எந்த மெசேஜ் லிங்க் வந்தாலும் அதை திறந்து அதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டாம். வங்கி கணக்கு விவரங்களை பாதுகாப்பது வாடிக்கையாளர்களின் கடமை. அதை வாடிக்கை–யாளர்கள் மீறும் போதுதான் தவறு ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்க வேண்டும் என வங்கி நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். நகரில் வங்கி மெசேஜ் மூலமாக பல லட்ச ரூபாய் அபகரிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மோசடி கும்பல் எங்கே இருந்து எப்படி வங்கி கணக்கில் உள்ள பணத்தை சுருட்டுகிறார்கள் என போலீசாரால் கண்டறிய முடியவில்லை. மோசடியாக அபகரித்த பணத்தையும் மீட்க முடியவில்லை. வங்கி கணக்கு விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.