மருத்துவ சிகிச்சைக்காக வந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம் : போலீஸார் விசாரணை
கோவை மதுக்கரை அடுத்துள்ள திருமலையம்பாளையம் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் என்கிற பெயரில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி உலகில் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையிலே மூளை சுருக்கம் மற்றும் வாத நோயால் பாதிக்கப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த அசி கோமர்ஸ்(65) என்கிற பெண்மணி இரண்டு வருடமாக பல இடங்களுக்கு சென்று சிகிச்சை பெற்று சரியாகாததனால், கடந்த மாதம் ஏழாம் தேதி தனது கணவர் மைக்கேல் கோமர்சுடன் வந்து ஆயுர்வேத மையத்தில் சேர்ந்து அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அங்குள்ள மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளனர். காய்ச்சல் குறையவில்லை. இதனால் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து க.க.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது கணவர் மைக்கேல் கோமர்சிடம் மனைவியின் உடல் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத மையத்திற்கு சிகிச்சை பெற வந்த வெளிநாட்டு பெண் காய்ச்சல் ஏற்பட்டு இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.