மதுரை : இன்று மதுரை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நேற்று மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 5 மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இன்று மதுரையில் கள ஆய்வுக்குப் பிறகு இன்று மாலை மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
நாகர்கோவிலில் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் – ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில், நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் மாலையில் ஐந்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை நேற்று மாலை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மதுரையில் இன்று ( மார்ச் 6) களஆய்வு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார். பின்ன இன்று மாலை, மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் புறப்படுகிறார். நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனும் பங்கேற்கிறார்.
தோள்சீலை எழுச்சிப் போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த தற்போதைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியது. அதன்பின்னர் தான் மேலாடை அணியும் உரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டது. தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு மாநாடு நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இரவு, நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை மார்ச் 7-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணி அளவில் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.