பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது அமைச்சரவை கூட்டம்..!!

மிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்க உள்ளது. இதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என பெரும் எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

விலைவாசி உயர்வு, நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தி முடிக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று மார்ச் 9ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் இந்த அமைச்சரவை கூடுவதால் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. பொது பட்ஜெட்டில் இடம் பெற உள்ள திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.