அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றதிலிருந்து நடைபெற்ற 2019 நாடாளுமன்ற மற்றும் 2021 சட்டமன்ற பொது தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் முழுமையாக திமுகவுக்கு சென்று விட்டன.
இதுவே அதிமுக தோல்வியடைய காரணம் என சி.வி சண்முகம் உட்பட பல அதிமுக முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாக பேசினார்.
அதே போன்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ் மணியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடனான கூட்டணியை விரும்பவில்லை.
இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி “வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்” என பேசியது பாஜகவினரை அதிருப்தியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து வெளியான இரட்டை இலை சின்னம் மற்றும் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்டவை எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதமாக அமைந்துள்ளது.
இதனால் ஏற்கனவே அறிவித்தது போல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி அமைப்பதற்கான திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி துவங்கியுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக திமுக ஆட்சியின் மீதும் தலைமையின் மீதும் அதிப்தியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை அதிமுக அணியில் இணைய தயாராக இருக்கின்றன. ஆனால் பாஜக இருப்பதால் அவர்களால் வர முடியவில்லை.
எனவே பாஜகவை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட்டு திமுக கூட்டணியை உடைக்கும் வியூகங்களை எடப்பாடி பழனிச்சாமி வகுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பாஜக நிர்வாகிகள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் பாஜக தான் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி என்று பேசி வந்த அண்ணாமலையை பாஜகவில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் அறிக்கையின் மூலம் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.
இந்த விமர்சனங்கள் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாக பாஜக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் மூலம் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜகவை வெளியேற்றிவிட்டு திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.