சென்னை: அதிமுக உறுப்பினர் அட்டையில் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய உறுப்பினர் சேர்ப்பில் தீவிரம் காட்டி வருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம் படமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள அதிமுக புதிய உறுப்பினர் அட்டைகளில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.
அதேபோல் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு கீழ் எடப்பாடி பழனிசாமியின் கையெழுத்து மட்டுமே உள்ளன.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு வந்தது முதல் உற்சாகமாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, மாற்றுக்கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அதிமுகவுக்கு வளைப்பது போன்ற பணிகளை முழுவீச்சில் முன்னெடுத்து வருகிறார். இதனிடையே அதிமுகவின் உறுப்பினர் அட்டையிலும் அதிரடி மாற்றங்களை நிகழ்த்தியுள்ள எடப்பாடி பழனிசாமி அதில் தனது இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு கீழ் தனது கையெழுத்து மட்டும் இருக்கும்படி செய்திருக்கிறார்.
இதற்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளின் கீழ் கையெழுத்திட்டு வந்தார்கள். இப்போது அந்த பழைய கார்டுகள் எல்லாம் குப்பையில் வீசி எறியப்பட்டு புதுப்பொலிவுடன் உறுப்பினர் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அட்டையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவர் படங்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வரும் முன்னர் வரை கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி இப்போது அதி தீவிரமாக கட்சிப் பணிகளை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் புதிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். தன்னை நம்பி மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்து இணைவோருக்கு கட்சியில் ஏதேனும் ஒரு பதவி கொடுக்க விரும்புகிறார் எடப்பாடி பழனிசாமி.
முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியப் பதவிகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் நடக்கும் அதிரடி மாற்றங்களை கண்டு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கொதித்துப் போய் அடுத்தக்கட்ட சட்டப்போராட்டம் பற்றி ஆலோசித்து வருகிறது.