கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கோமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மணிமாறன். ஒட்டன்சத்திரத்தில் நடந்த விபத்தில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை என்று தெரியவந்தது. இன்சூரன்ஸ் புதுப்பிக்க மணிமாறன் பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் விபத்து நடந்ததாக வழக்கு பதிவு செய்து அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தவிர நில ஆவணங்களை காணவில்லை என்று சான்றிதழ்களை அவர் வழங்கியதாகவும், தெரிகிறது. மேலும் காவல் ஆவணங்களில் ஆய்வாளர்களின் கையொப்பத்தை அவரே இட்டதும் ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த மோசடிகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு விசாரணை நடத்தினார்கள். காவல்துறை ஆவணங்களை போலியாக திருத்துவதும், தயாரிப்பதும் மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மணிமாறனை உதவி ஆய்வாளராக பதவியில் இருந்து தலைமை காவலராக பதவி இறக்கம் செய்து கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் உத்தரவிட்டார்.
இதை குறித்து காவல் அதிகாரிகள் கூறும்போது:-
மணிமாறன் மோசடி புகார் தொடர்ந்து தளி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவர் மீதான மோசடி உறுதி செய்யப்பட்டதால் கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் உத்தரவின் பேரில் மணிமாறன் தற்பொழுது குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தலைமை காவலராக மாற்றப்பட்டு உள்ளார் என்றனர்.