கோவை வடவள்ளி கருப்புசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜா ( வயது 25) கோவை சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பகுதி நேரமாக இருசக்கர வாகன வாடகை (ரேபிடோ) செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஒரு பயணியை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவை ரயில் நிலையம் வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள். இருசக்கர வாகனத்தில் இப்படி பயணிகளை ஏற்றி வரக்கூடாது .இதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி தகராறு செய்தனர். பின்னர் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது . இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல் ,உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.