புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகளான கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் அவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே கவிதா கடந்த 11ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 9 மணி நேரம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய நிலையில், அவர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் மற்றும் கைது செய்ய தடை விதிக்கக் கோரியும், அதே போன்று பாதுகாப்பு கோரியும் கவிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறை சம்மன், கவிதாவை கைது செய்வதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. கவிதாவின் மனு வரும் 24ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ள நிலையில், கவிதா டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.