பொதுத் தேர்வு நடக்கும் நேரம்… கோயில்களில் ஒலிப்பெருக்கி தவிர்க்கவும் – விழா குழுவினருக்கு உயர்நீதிமன்றம் அட்வைஸ்..!

சென்னை: சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில், தேர்வு நேரத்தில் பங்குனி திருவிழா நடத்த தடை விதிக்கவும், தேர்வுகள் முடியும் வரை திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரியும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில் திருவிழாக்களின்போது ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேர்வு நேரங்களில் நடத்தப்படும் திருவிழாக்களை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம், தேர்வு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து கடந்த 2019ம் ஆண்டே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விழாக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்றுவதாக தெரிவித்தார். இதை ஏற்று மனுவை தள்ளுபடி செய்ததுடன், பங்குனி திருவிழாவை பங்குனி மாதத்தில் தான் நடத்த முடியும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தேர்வு நேரங்களில் திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். பெற்றோர் தங்கள் குழந்தைகள் படிக்க சுமூகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.