ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு சேர்க்கப்பட்டார்.
மூச்சுத்திணறல் மற்றும் திடீர் நெஞ்சுவலி அவருக்கு ஏற்பட்டிருந்ததாகவும், லேசான நுரையீரல் தொற்று அவருக்கு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இருதய சிகிச்சை பிரிவை சேர்ந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், லேசான நுரையில் தொற்றும் தற்போது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக உள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் இன்று காலை தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கும் இதயவியல் நிபுணர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றாக உள்ளார். நேற்று மாலை மருத்துவனையில் சேர்ந்தார். ஓரிரு நாளில் வீடு திரும்பலாம். அமைச்சர் அவரை சந்தித்து பேசினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இருமல் அதிகமாக இருந்தது. டெல்லி சென்றதால் தொற்று இருக்கலாம். தற்போது அவர் உடல் நிலை நன்றாக உள்ளது. இன்று ஒருநாள் ஐசியுவில் இருப்பார். நாளை சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த மார்ச் 2ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவியேற்றார்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்திப்பதற்காக ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்றைய தினம் டெல்லி சென்று திரும்பிய நிலையில் நள்ளிரவில் ஏற்பட்ட உடல் நலக்கோளாறால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.