கோவை மத்திய சிறையில் 2,000 க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பீடி, கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் கைதிகள் பயன்படுத்தாமல் இருக்க ஜெயிலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் சிறைக் காவலர்களுடன் இணைந்து கைதிகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துகிறார்களா ? என ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மத்திய சிறையில் ஜெயிலர் சிவராஜன் தலைமையில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சிறை முழுவதும் அதிரடி சோதனை செய்தனர். இந்த சோதனையில் கைதிகள் 10 பேர் செல்போன்களை பதுக்கி வைத்து பேசி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கோவை மத்திய சிறையில் ஜெயிலில் சிவராஜன் செல்போன்களை பதுக்கி வைத்து பயன்படுத்திய கைதிகள் மீது ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை மத்திய சிறையில் செல்போன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வந்த பத்து கைதிகள் மீது தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.