தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று போல காணப்படும் இந்த காய்ச்சலுக்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். பாதிப்பை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக கோவை உட்பட மாநிலம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் எந்தவித காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக சுகாதாரத் துறையினரிடம் தெரிவிக்க கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா கூறும் போது
கோவை மாவட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக நாள்தோறும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் மூலம் தினசரி ஐந்தாயிரம் பேர் வரை பரிசோதனை செய்யப்படுகின்றனர். இவர்கள் 180 முதல் 200 பேருக்கு அணைத்து விதமான காய்ச்சல் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தீவிர பாதிப்பு இல்லாத மருந்துகள் வழங்கப்பட்டு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் முக கவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்ற வழிமுறைகளை பின்பற்ற அறிவித்தப்பட்டு உள்ளது. இன்ஃப்ளூயன்ஸா பாதிப்பு அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் தற்போது 12000 கர்ப்பிணிகள் உள்ளன. இவர்களுக்கு எந்த விதமான அல்லது லேசான காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளிட்டு எங்கு சிகிச்சை பெற்றாலும் அந்த பகுதியில் கிராம செவிலியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணிகள் தொடர்ந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட கிராம செவிலியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு பள்ளிக்கு வரும் மாணவர்களின் விவரங்களை அளிக்க மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் இருந்து அளிக்கப்படும் விவரங்கள் அடிப்படையில் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்ட மாணவர்களை அந்த அந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் மூலம் சோதனை செய்து சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.