கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, நாயக்கனூர் லட்சுமி கோவில் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 60) இவரது மனைவி கலாமணி (வயது 60) இருவரும் கூலி தொழில் செய்து வந்தனர்.நேற்று அதிகாலையில் கலாமணி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார் . இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்கு பதிவு செய்து கலாமணியை கைது செய்தார்.
இவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-எங்களுக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகிறது 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தற்போது நானும் என் கணவரும் தான் தனியாக வசித்து வருகிறோம். இருவரும் ஒன்றாக வேலைக்கு செல்வோம் தினமும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம்.என் நடத்தையில் என் கணவர் செல்வராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நானும் என் கணவரும் 18 ஆம் தேதி இரவில் மது குடித்தோம். அப்போது அவர் ஒருவர் பெயரைச் சொல்லி நீ அவரை வைத்திருக்கிறாயா? என்று கேட்டார்.இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவரை இன்றுடன் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். அவர் தூங்கியதும் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து தலையில் தூக்கி போட்டு கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.கைது செய்யப்பட்ட மனைவி கலாமணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று மாலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.