சென்னை: உகாதி திருநாளை முன்னிட்டு, தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளி யிட்ட வாழ்த்துச் செய்திகள்:
ஆளுநர் ஆர்.என். ரவி: உகாதி, குடி பத்வா, செட்டி சந்த் மற்றும் சைத்ரா நவராத்திரி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு, மக்களுக்கு, குறிப்பாக தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி,மற்றும் இந்தி சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
இந்த மங்களகரமான விழாவில், நமது மதிப்பை பிரதிபலிக்கும் இரக்கம் மற்றும் ஒத்துழைப்புடன், நமது மகத்தான தேசத்தின் விரிவான எழுச்சிக்காக, வைராக்கியம், ஆர்வம், அர்ப்பணிப்புடன் நம்மை மீண்டும் அர்ப்பணிப்போம். இந்த பண்டிகைகள் நம் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் நல்லஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியை யும் எடுத்து வரட்டும்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தெலுங்கைதாய்மொழியாகக் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதிநல்வாழ்த்துகள். மேலும், இந்தநன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்க எனது நல்வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்:உகாதி திருநாளில் புத்தாண்டை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட உடன்பிறப்புகளுக்கு எனதுநல்வாழ்த்துகள். அறுசுவை உணவோடு மகிழ்ச்சி பொங்க புத்தாண்டை வரவேற்கும் உங்களது இல்லத்திலும், வாழ்விலும் அந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைத்திட நெஞ்சார வாழ்த்துகிறேன். விந்திய மலைக்குத் தெற்கே பரந்து வாழும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய உறவும், ஒற்றுமையும் வலுப்பட வேண்டும்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி:பிரம்மன் உலகத்தைப் படைத்த நாளாகக் கருதப்படும் உகாதி திருநாளைக் கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். மனித வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் மாறிமாறி வரும். அதை பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை இத்திருநாள் நமக்கெல்லாம் உணர்த்துகிறது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மலரும் இப்புத்தாண்டு, வாழ்வில் வளத்தையும், நலத்தையும் செழிப்பையும், மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் அனைவருக்கும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். அனைத்து தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தை தாயகமாகக் கொண்டு தெலுங்கு மற்றும் கன்னடம் மொழி பேசுகிற, மொழி சிறுபான்மையினர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களுக்கு உகாதி திருநாள் வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு உளமார்ந்த உகாதி வாழ்த்துகள். தமிழர்களுடன் மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவர்கள் உணர்வால் தமிழர்களின் சகோதரர்களாகவே வாழ்கின்றனர். தமிழக வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபடுவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உகாதி புத்தாண்டு கொண்டாடும் இந்த தருணத்தில், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு எல்லா வளமும் பெற்று அன்பும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்வில் என்றும் நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.
மேலும், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், பாரிவேந்தர் எம்.பி.,ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.