வாஷிங்டன்: இலங்கை கடந்த ஆண்டு முதல் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன.
மேலும் கடனுதவி கேட்டு சர்வதேச நாணய நிதியத்தையும் இலங்கை அரசு அணுகியது. இது தொடர்பாக இலங்கை அரசுடன் சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் டாலர் அதாவது ரூ.24.8ஆயிரம் கோடி கடனுதவி வழங்குவதற்கு திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் தவணையாக 333 மில்லியன் டாலர்கள் ரூ.2727 கோடி உடனடியாக வழங்கப்படும். இதனை தொடர்ந்து பல்வேறு தவணைகளாக கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுக்கு வழங்கும். கடனுதவி வழங்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிவிப்பை அதிபர் ரணில் விக்ரம சிங்கே வரவேற்றுள்ளார்.