ஈரோடு மாவட்டம் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கிராமங்கள் தோறும் திருவீதி உலா செல்வதற்காக கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டது. பக்தர்கள் பண்ணாரி அம்மன் சப்பரத்தை தோளில் சுமந்தபடி உற்சாகத்துடன் சென்றனர். அப்போது கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு பண்ணாரி அம்மனை வழிபட்டனர். மேலும் கோயில் முன்பு ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பட்டாசுகள் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க பண்ணாரி அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம் சென்றடைந்தது. நேற்று காலை சிக்கரசம்பாளையம் கிராமத்தில் துவங்கிய திருவீதி உலா 28 ஆம் தேதி வரை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பண்ணாரி அம்மன் எழுந்தருளிய பின் 28ஆம் தேதி இரவு பண்ணாரி அம்மன் சப்பரம் மீண்டும் கோவிலை சென்றடைகிறது. இன்று 23 ஆம் தேதி இக்கரை நெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், தயிர்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, கொத்தமங்கலம், பழைய கொத்தமங்கலம், பகுடுதுறை, முடுக்கன் துறை கிராமங்களிலும், 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், இக்கரை தத்தப்பள்ளி கிராமங்களிலும், 25ஆம் தேதி சனிக்கிழமை அக்கரை தத்தப்பள்ளி, உத்தண்டியூர் அய்யன் சாலை, பகுத்தம்பாளையம், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் கிராமங்களிலும், 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் சத்தியமங்கலம் நகர் பகுதியிலும், 28 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோம்புபள்ளம், பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவ பாளையம், புதுப்பீர்கடவு, பட்டரமங்கலம், ராஜன்நகர் கிராமங்களிலும் திருவீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு அம்மன் சப்பரம் பண்ணாரி அம்மன் கோவிலை சென்றடைகிறது..