கோவையை அடுத்த சூலூர் கண்ணம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் சிவா என்ற சிவக்குமார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2016 – ம் ஆண்டு ஓடும் பேருந்தில் நகை பறித்தது சம்பந்தமாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் கவிதா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த கவிதாவிற்கு வேறு நபருடன் கள்ளக் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை கவிதாவின் கணவர் கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் கவிதா தனது குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து வேறு நபருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக கோவை நீதிமன்றம் கவிதா வந்தார். அப்போது அவரை சந்தித்த சிவக்குமார், குழந்தைகள் கவலையில் இருப்பதால் தன்னுடன் வருமாறு அழைத்தார்.
ஆனால் அவருடன் செல்ல கவிதா மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், கவிதா மீது ஆசிட் வீசினார்.
இதில் கவிதாவின் முகம், கை, கால் உள்ளிட்டவை வெந்தது. படுகாயம் அடைந்த கவிதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் பட்டதில் உடல் வெந்த நிலையில் கவிதாவிற்கு நேற்று 2 – வது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவரது உடல் நிலை மோசமாக உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது:-
ஆசிட் வீசப்பட்டத்தில் கவிதாவிற்கு 85 சதவீதம் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருகின்றனர். ஆசிட் வீச்சால் கவிதா கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், இனி வரும் நாட்களில் உள் உறுப்புகள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரை காப்பாற்ற அனைத்து விதமான சிகிச்சைகளையும் அளித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.