அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
அதேநேரம் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ராகுல்காந்தி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு அனுமதி அளிக்கும் விதமாக 30 நாட்கள் அவகாசம் அளித்து நீதிமன்றம் பினை வழங்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்றையதினம், வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ராகுல்காந்தியின் தகுதி நீக்கம், சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நாள் முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது. ஆகையால் தகுதி நீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் ராகுல் காந்தி குடியிருத்து வருவது குறிப்பிடத்தக்கது.