ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி சுற்றுவட்டார கிராமங்களில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள வடக்குப்பேட்டை, கடைவீதி, நிர்மலா தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில் திருவீதி உலா நடைபெற்றது. பொதுமக்கள் பண்ணாரி அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். இன்று சத்தியமங்கலம் பஸ் நிலையம், ரங்கசமுத்திரம், நேரு நகர், திம்மையன்புதூர் பகுதிகளில் திருவீதி உலா நடைபெற உள்ளது. நாளை பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக் குய்யனூர், காந்திநகர், பசுவபாளையம், புதுப்பீர்கடவு பட்டரமங்கலம் மற்றும் ராஜன்நகர் கிராமங்களில் பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை செவ்வாய்க்கிழமை இரவு பண்ணாரி அம்மன் சப்பரம் திருவீதி உலா முடிந்து கோவிலை சென்றடைகிறது. இதைத் தொடர்ந்து அன்று இரவு கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது..