டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து லோக்சபாவில் கறுப்பு உடை அணிந்து திமுக எம்.பிக்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வென்ற, வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதேபோல் ராகுல் எம்பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லோக்சபாவில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர். மேலும் ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு தொடர்பாக விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.
ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்ததாக விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். திரு ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.