காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்து தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் நாடாளுமன்ற மக்களவைச் செயலகம் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது. ஒருவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
ஒருவேளை ராகுல் சிறை செல்ல நேரிட்டால் வயநாடு தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும். அதன் பிறகு அடுத்த 6 மாதத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் வரும். இதை பயன்படுத்தி காங்கிரசை வீழ்த்த பாஜக திட்டமிடும் நிலையில் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் பிரியங்கா காந்தியை தொகுதியில் நிற்கவைக்க கட்சியினர் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ராகுல் சிறை செல்ல நேரிட்டால் அனுதாப வாக்குகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. இதனால் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி அதிக வாக்குகள் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி களமிறங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது மோடியா அல்லது இந்த லேடியா என்ற போட்டி நிலவுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது செல்வி ஜெயலலிதா தமிழ்நாட்டில் அந்த மோடியா அல்லது இந்த லேடியா என்று கேட்டு வாக்குகளை அள்ளினார். மேலும் இதே போன்று அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தியும் சவால் விடலாம் என்று கூறப்படுகிறது.