அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து அவர் பேசுகையில், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்பில் 27 சதவீதம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் அதிமுக ஆட்சியில் 110 அறிவிப்பில் 68 சதவீதம் பணிகளை நிறைவேற்றி உள்ளோம் என்று நிதியமைச்சர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் உள்ளது. நிதியமைச்சர் பொய்யான தகவலை சொல்லி வருகிறார் என்று குற்றம்சாட்டினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், “அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலமாக சென்னை மாநகராட்சி பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த திட்டத்தை முதல் முதலாக தொடங்கப்பட்டது அதிமுகதான். மேலும் அதிமுக ஆட்சியில் அம்மா உணவகத்தில் உணவுகளை ருசியாக கொடுத்தோம், ஆனால் திமுக ஆட்சியில் பணிபுரியும் ஆட்களை குறைத்து, தரமான உணவு இல்லை என்பதால் உணவு சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது” என்றார்.
பாஜக- அதிமுக கூட்டணி விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், அதிமுக – பாஜக கூட்டணியில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் ஹிந்தியில் அச்சிட வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ” அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது” என்று தெரிவித்தார்.