வைக்கம் போராட்ட நூற்றாண்டு ஓராண்டு சிறப்பாக கொண்டாடப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கேரள மாநிலத்திற்கு உட்பட்டிருந்த திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்ற இடத்தில் சோமநாதர் கோவிலை சுற்றியிருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் நடக்கக் கூடாது என்று ஒடுக்குமுறை இருந்தது.

பல ஆண்டுகளாக இருந்த இந்தக் கொடுமையை எதிர்த்து 1924ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் முதலில் போராட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்திலிருந்து சென்று கலந்துகொண்ட பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இன்று (வியாழக்கிழமை) இந்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று. வரலாற்றின் முக்கியமான நாள்.

இந்தியாவில் நடந்த கோயில் நுழைவுப் போராட்டங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக திகழ்ந்தது வைக்கம் போராட்டம் என்ற முதல்வர் ஸ்டாலின், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட இருக்கிது என்றும் இதற்காக ஓராண்டு முழுவதும் ப்லவேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

வைக்கம் போராட்டத்தின்போது பெரியாரைக் கைது செய்து சிறை வைத்திருந்த அருவிக்குத்து கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சமூக நீதி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்டம் தொடர்பான 60 சிறிய நூல் வெளியிடப்படும். அந்த நூல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலி நூலாகவும் வெளியிடப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இத்துடன் கேரளாவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் அந்த மாநில முதல்வர் பினராய் விஜயனுடன் தானும் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்க உள்ளதாவும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.