சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி முதல் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில், எட்டு மாதங்களுக்கு பின்னர் கடந்த மாதம் 1ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல மறுபுறம் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையும் ரூ.350 அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,068.50லிருந்து ரூ.1,118.50க்கு ஆகவும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,917 லிருந்து ரூ.2,268 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
தேசிய தலைநகரான டெல்லியை பொறுத்த அளவில் 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்துள்ளது. இதன் காரணமாக 19 கிலே சிலிண்டர் ரூ.2,028க்கு விற்பனையாகிறது. சென்னையை பொறுத்த அளவில் ரூ.76 குறைந்து தற்போது ரூ.2,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.