இளைஞரிடம் 10 லட்சம் பணம் பறித்த வழக்கில் சாட்சியங்களை கலைக்க முயன்றதாக முன்னாள் பெண் காவல் ஆய்வாளரை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்தனர் காவல்துறையினர்.
கடந்த 2021-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், இளையான்குடியை சேர்ந்த அரசத் என்பவரிடம் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தி என்பவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து 10 லட்சம் பணம் பறித்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்னர் இன்ஸ்பெக்டர் வசந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே, இன்ஸ்பெக்டர் வசந்தி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்தநிலையில் வழக்கின் முக்கிய சாட்சியான விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு நபரை மிரட்டி சாட்சியை கலைக்க முயற்சியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் மதுரை கிளைமான் மற்றும் ஊமச்சிகுளம் காவல்துறையினர் அவரை பிடிக்கச்சென்றனர். மதுரை புறவெளிப் பகுதியில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகம் அருகே காரில் இன்ஸ்பெக்டர் வசந்தி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, சினிமா பாணியில் அவரை காவல்துறையினர் சேசிங் செய்து மடக்கிப்பிடித்தனர். வசந்தியுடன் வந்தவர் காவல்துறையினரை கடுமையாக திட்டினார். பின்னர் வசந்தியை ஊமச்சிகுளம் காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். பின்பு புகார் அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் வசந்தி ஒப்படைக்கப்பட்டார்.
பணம் பறித்த வழக்கில் சாட்சியை கலைக்க முயன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டரை காவல்துறையினர் சினிமா பாணியில் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..