சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளதால் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வன பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் எந்த கோவிலிலும் இல்லாத அதிசயமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டு அன்று மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இதற்கென தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே குண்டம் திருவிழாவை ஒட்டி இன்று முதல் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் குண்டத்தின் முன்பு உப்பு மிளகு தூவியும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர். தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் இடம் பிடித்து காத்துள்ளனர். காவல்துறை சார்பில் கோவில் வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில் கோவில் முன்பு தயார் நிலையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தீமிதிக்காத பக்தர்களுக்கான கோவிலின் மேற்கு புற வாசலில் இருந்து நேரடியாக அம்மனை தரிசனம் செய்வதற்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு புஞ்சை புளியம்பட்டி பண்ணாரி அம்மன் அன்னதான குழு சார்பில் நேற்று காலை முதல் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. குண்டம் திருவிழாவில் கோவை சூலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாட்டு வண்டியில் வந்த பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் தங்க இட வசதி செய்து தரப்பட்டுள்ளது. மாட்டு வண்டிகளில் வந்த பக்தர்கள் செவ்வாய்க்கிழமை மாலை பக்தர்கள் குண்டம் இறங்கி முடித்த பின் மாடு உள்ளிட்ட கால்நடைகள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படுகிறது. போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்ய பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 3 மணி வரை கனரக சரக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்காக சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் சாலையிலும் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து பவானிசாகர் வழியாக பண்ணாரி செல்லும் சாலையிலும் ஆங்காங்கே நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் கோவிலில் அம்மனை வழிபடுவதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.