ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில் குறிப்பாக தலமலை, கேர்மாளம் வனப்பகுதிகளில் கரடிகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இந்த நிலையில் நேற்று திம்பம் – தலமலை வனச்சாலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி சாலையில் நடமாடியதைக் கண்டு அச்சமடைந்து காரை நிறுத்தினர். சாலையில் கார் வருவதை கண்ட கரடி சாலையில் இருந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. கரடி நடமாட்டத்தை காரில் சென்றவர்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பகல் நேரத்தில் சாலையில் கரடி நடமாடுவதால் இச்சாலையில் பயணிப்பவர்கள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.