ஆவடி : ஆவடியில் கட்டுமானப் பணியின் போது 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அடுக்கு மாடி குடியிருப்பின் மேலாளர், பொறியாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் மத்தியரசு ஊழியர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு கட்டுமானப் பணியில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த குஸ்பூர் அலி (வயது 24), அவரது தம்பி ரூபேல் ஹக் (வயது 15) மற்றும் பலர் 8 வது மாடியில் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ரூபேல் ஹக் தவறி தரைத்தளத்தில் விழுந்ததில், அவனது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.இதுபற்றி தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்தித்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி ஆவடி காவல் ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் மேலாளர் திருநின்றவூரைச் சேர்ந்த ஷாஜகான் (வயது 50), கட்டுமான பொறியாளர் பொன்னேரியைச் சார்ந்த கந்தசாமி (வயது 51), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரூபன் உசேன் (வயது 24) ஆகிய 3 பேரை நேற்றுசி மாலை கைது செய்தனர்.