தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய அறிப்புகளை வெளியிட்டார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு நிதி வழங்கப்படும்; மது அருந்துதலுக்கு அடிமையாகாமல் இருக்கவும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நான்கு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றுஅறிவித்தார்.
ரகசிய தகவலாளர்களுக்கு வெகுமதி தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும், எரி சாராயம் போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை கைப்பற்றுவதில் பெரும்பங்கு வகிக்கும் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்கத் தொகை 15 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்த்தார்.
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார் அவர், தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் மேற்பார்வையாளர்களுக்கு, ரூ.1,100ம், விற்பனையாளர்களுக்கு ரூபாய் 930ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 840ம் மாதம்தோறும் கூடுதலாக உயர்த்தி 1.04.2023 முதல் வழங்கப்படும் என்றும், இதற்காக ஆண்டொன்றுக்கு ரூபாய் 31.57 கோடி கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்தார்.
500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் ரூ.16 கோடி செலவில் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை பணியாளர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப நலநிதி உதவித்தொகையை மூன்று லட்சத்தையும் இருந்து ஐந்து லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், தமிழ்நாடு மாநில வாணிப கழக, 1,000 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 10.03 கோடி செலவில் பண பாதுகாப்பு பெட்டகங்கள் (Cash Safe boxes) நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன இதில் தகுதியான 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்றும் தெரிவித்தார்.