ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று நம்பி முதலீடு செய்து 15 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை இழந்த இளைஞருக்கு அதிரடியாக செயல்பட்டு பணத்தை மீட்டுத் தந்துள்ளனர் கோவை சைபர் க்ரைம் போலீஸார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பாளையத்தை சேர்ந்தவர் ஞானமணி ( 38). ஐ.டி. ஊழியர். இவர் கொரோனா தொற்று காலத்தின்போது ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்பை நம்பி ஒரு செயலி மூலம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பல்வேறு கட்டங்களாக அவர் அந்த செயலி மூலம் 15 லட்சத்து 73 ஆயிரத்து 395 முதலீடு செய்து உள்ளார்.
இந்தநிலையில் அவரது முதலீட்டிற்கு இதுவரை 61 லட்சத்து 5 ஆயிரம் லாபம் கிடைத்து உள்ளதாக அந்த செயலியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து லாப பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் அவர் பல்வேறு வகைகளில் முயற்சி செய்தும் அந்த லாப பணத்தை அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் கடந்த 5 ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அந்த செயலி போலி என்பதும், அவரது பணம் 15.73 லட்சம் மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்கி அதில் இருந்த 15.73 லட்சம் பணத்தை மீட்டு நேற்று ஞானமணியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் முன் அது குறித்த செயலிகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஆன்லைன் மூலம் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.இதன் மூலம் போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்க முடியும்” என்று கூறினர்..