கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மாநகர ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சந்திரா (வயது 54) மாநகர ஆயுதப் படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் மாணிக்க மூர்த்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர் . அவர்களில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான். இந்த நிலையில் ஒரு மகன், கணவருடன் சந்திரா வசித்து வருகிறார். சந்திராவின் கணவர் மாணிக்க மூர்த்தி குடிப்பழக்கம் உடையவர். எந்த வேலைக்கும் ஒழுங்கா செல்வதில்லை .தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைப்பாராம்.இந்த நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவி சந்திராவை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .இது குறித்து சந்திரா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் , சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக கணவர் மாணிக்க மூர்த்தி மீது தாக்குதல், கொலை மிரட்டல் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.