சென்னை: இந்தியாவில் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய ஒழுங்கு முறை விதிகள் இருந்தாலும், மருத்துவ உபகரணங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.
மத்திய சுகாதாரத் துறை தகவல்களின்படி, நாட்டில் உள்ள மருத்துவ உபகரணங்களில் 80 சதவீதம் ஒழுங்குமுறைப்படுத்தப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவற்றை தரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பிரிவு சி மற்றும் டி வரையறைக்குக் கீழ் உள்ள அறிவிக்கை செய்யப்படாத மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும் பதிவு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு அக்.1-ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும், பதிவு உரிமம் கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மருந்து தரக் கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தால், நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிமம் வழங்கப்படும் என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..