கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வருகிற மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, ஷிமோகா உள்ளிட்ட தமிழர்கள் கணிசமாக வாழும் இடங்களில், அதிமுகவுக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் பெங்களூருவில் காந்தி நகர், கோலார் தங்கவயல் ஆகிய 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அக்கட்சியை சேர்ந்த பக்தவச்சலம், எம்.முனியப்பா ஆகியோர் வெற்றிபெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளனர். ஜெயலலிதா காலத்திலும் கர்நாடகாவில் அவருக்கு செல்வாக்கு இருந்தது.
இதனால் வரும் மே 10-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என கர்நாடக அதிமுக தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து பெங்களூருவில் உள்ள புலிகேசிநகர் தனி தொகுதியில் அதிமுக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி, ஆலோசனை நடத்தி நேற்று வேட்பாளரை அறிவித்தார். அதன்படி, அதிமுக சார்பில் அவைத் தலைவர் அன்பரசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்று இபிஎஸ் அறிவித்திருந்த நிலையில் இன்று ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “10.05.2023 அன்று நடைபெறவுள்ள கர்நாடகா சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக 159-புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் எம். நெடுஞ்செழியன் அவர்கள் நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.