அதிமுக தான் இனி பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படும்- திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே லட்சியம்- எடப்பாடி பேட்டி..!

.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் சாதகமாக வந்திருந்தன.

இருப்பினும், தேர்தல் ஆணையம் முறையாக எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமலிருந்தது. பிறகு எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் தன்னை அங்கீகரிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இப்படியான சூழலில் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க பொதுச்செயலாளராக அங்கீகரித்து, இரட்டை இலைச் சின்னத்தையும் அவருக்கு ஒதுக்கியிருக்கிறது.

இந்த நிலையில், “அ.தி.மு.க இனி பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படும். தி.மு.க-வை எதிர்க்கக் கூடிய தெம்பும், திராணியும் அ.தி.மு.க-வுக்குத்தான் இருக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க இனி பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படும். நீண்ட சட்டப் போராட்டம் நடத்தித்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறோம். இனி மற்றவர்களைப் பற்றி பேசி எங்கள் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இந்தக் கட்சியை நேசிப்பவர்கள், உண்மையாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும், ஒரு சிலரைத் தவிர கழகத்தில் இணைத்துக் கொள்வோம். அனைவரும் சேர்ந்து பொதுச்செயலாளராக என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கும் நான் தொண்டனாகத்தான் இருக்கின்றேன். தி.மு.க-வை எதிர்க்கக்கூடிய தெம்பும், திராணியும் உடைய ஒரே கட்சி அ.தி.மு.க-தான். விடியா தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களுடைய லட்சியம். குழப்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சில சுயநலவாதிகள் பிரிந்துபோயிருக்கிறார்கள். அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரத்தில் சட்டப்படி, பேரவைத் தலைவருக்கு மீண்டும் கடிதம் கொடுப்போம். என்றைக்கு இந்தச் சட்டமன்ற அவை ஏற்படுத்தப்பட்டதோ, அன்று முதல் இன்றுவரை எதிர்க்கட்சி துணைத் தலைவரை அமைப்பது மரபு. அதற்குரிய காரண காரியத்தையும் நாங்கள் கொடுப்போம். நீதிமன்றத்திலும் முழுமையான தீர்ப்பு வந்துவிட்டது. தேர்தல் ஆணையமும் நல்ல தீர்ப்பைக் கொடுத்துவிட்டது. அ.தி.மு.க எங்களோடு இருக்கிறது. எங்களைச் சார்ந்தவர் ஒருவர் எதிர்க்கட்சி துணைத் தலைவராக வருவதற்கு நிச்சயமாக நல்ல அறிவிப்பைக் கொடுப்பார் என்று நம்புகிறோம்.

தி.மு.க ஆட்சி போக வேண்டும் என்று இன்றைக்கு மக்களின் குரல் தமிழகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

மேலும் நேற்றைய தினம் சட்டப்பேரவையில், அ.தி.மு.க தலைமை அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் பேசியது குறித்து செய்தியாளர்களிடம், “யார் அந்த ரௌடிக் கும்பலோடு வந்தது, யார் தலைமைக் கழகத்தில் பூட்டை உடைத்தது, யார் பொருளைத் திருடிக்கொண்டு போய் ஒப்படைத்தது என எல்லாம் உங்களுக்குத் தெரியும், உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.

எடப்பாடி பழனிசாமி

அண்ணன் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தில் தன்னை நிலைநிறுத்துவதற்காக இதைப் பேசியிருக்கிறார். தி.மு.க-வின் `பி’ டீமாக அண்ணன் ஓ.பி.எஸ் செயல்பட்டார். தி.மு.க-வினர், அண்ணன் ஓ.பி.எஸ்-ஸைப் பயன்படுத்தி, சில கட்சித் தலைவர்களை வைத்து இப்படிப்பட்ட ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள். இது புனிதமான இடம். நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.