நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அவரின் பதவி பறி போக இருப்பதாக சில உடன்பிறப்புக்களே தகவலை கசிய விட்டு வருகின்றனர்.
தமிழ் வருடப்பிறப்பான ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் மீதும், சில திமுக முன்னோடிகள் மீதும் சொத்துக் குவிப்பு புகார்களைக் கூறி, திமுகவின் ஊழல் என்று குற்றச்சாட்டுகளை நிருபர்களின் முன்னிலையில் வைத்தார்.
இந்நிலையில் அது குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், பத்திரிக்கையாளருக்கும் இடையே நடந்த உரையாடலின் சிறு ஆடியோ க்ளிப்பை மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை நேற்று ஏப்ரல் 20ம் தேதி வியாழக்கிழமை ட்வீட் செய்துள்ளார். அந்த ஆடியோவில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சபரியும் (அவரது மைத்துனர் சபரீசனைப் பற்றிய குறிப்பு) கடந்த ஆண்டில் பெருமளவில் சொத்து சேர்த்ததாக நிதி அமைச்சரின் குரலில் ஒலிக்கும் ஆடியோ எனக் கூறப்பட்டுள்ளது. அண்ணாமலையில் ட்விட்டர் பதிவுக்கு உடனடியாக பலன் கிடைத்தது.
சில ஆளும் திமுக தலைவர்கள் மீது பாஜக சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளின் சமீபத்திய ‘கூற்றுக்களை’ ஆடியோ க்ளிப் தெள்ள தெளிவாக நிரூபிக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார். இந்த ஆடியோ தன்னுடைய குற்றச்சாட்டை ஆதரிப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக தலைமை, இந்த ஆடியோ குறித்து டென்ஷனானதாக உடனிருக்கும் வட்டாரங்கள் புலம்பி வருகின்றன. ஏற்கெனவே பி.டி.ஆர். நிதியமைச்சராக இருந்து வரும் நிலையில், தலைமை செயலகத்தில் கட்சிக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக காரியங்களைச் சாதிக்க, அவரை நெருங்க முடியவில்லை என்றும், அமைச்சர்கள் கூறியுமே, நிதித்துறையில் வேலைகள் நடைபெறாமல் இருப்பதாகவும் புகார்கள் தொடர்ந்து தலைமைக்கு வந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள்.
இதற்கிடையே அண்ணாமலை குற்றம் சாட்டியவர்கள், அவர் மீது தொடர்ந்து வழக்கு மேல் வழக்காக போட்டு வருகின்றனர். எப்பொழுதும் கலகலப்பாக பேசக் கூடிய உள்ளாட்சி அமைச்சரோ காவேரி மருத்துவமனையை 13 பேர் கூட்டாக நடத்தி வருகின்றனர். அண்ணாமலையிடம் சொல்லி என் பெயருக்கு காவேரி மருத்துவமனையை மாற்றித் தரச் சொல்லுங்க என தனக்கே உரிய பாணியில் நக்கலாக கூறியிருக்கிறார்.
அண்ணாமலைப் பேச்சு ஜார்ஜ் கோட்டையிலும் மீசை அமைச்சரின் பேச்சு மலைக் கோட்டை மாநகரிலும் ஹைலைட்டான டாபிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.